68 : என்னருமைக் காதலி கணனி

அண்மையில் ஆதவா ஒரு கட்டுரையில் தானும் கணனி விளையாட்டுகளும் எப்படி ஒன்றுடன் ஒன்று பின்னிப பிணைந்து இருந்தோம் என்று எழுதி இருந்தார். அதை வாசித்ததும் நானும் எனது கணனி அனுபவங்களை ஒரு கட்டுரையாக எழுத வேண்டும் என்ற எண்ணம் உருவானது. இந்த எண்ணத்திற்கு வித்திட்ட ஆதவனிற்கு நன்றிகள்.

நான் முதன் முதலாகக் கணனியைக் கண்டது 1993 ல் அதாவது அப்போது ஆண்டு ஐந்து படித்துக்கொண்டு இருந்தேன். நான் இடைவேளை நேரத்தில் அடிக்கடி செல்வது கணனி அறை யன்னலோரம். அப்போது எமது பாடசாலையில் ஒரு கணனி இருந்தது. அதை என்ன தேவைக்காகப் பயன் படுத்தினார்கள் என்பது இன்று வரை எனக்குத் தெரியாது. யன்னல் ஓரத்தில் நின்று கணனியை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருப்பேன். கணனி என்பது எமக்கெல்லாம் எட்டாக்கனி. பாடசாலையில் அதிகமாகப் பாதுகாக்கப்பட்ட அறைகளில் அதுவும் ஒன்று. இவ்வாறு அந்தக் கணனியைப் பார்த்துப் பார்த்து என் காலம் கழிந்தது. கணனி என்றால் ஏதோ மாயா ஜாலம் செய்யும் என்று பேசிக்கொண்டனர். நண்பர்கள் தம் பாட்டிற்கு ஏதேதோ சொல்லிக்கொண்டார்கள். இப்போதுதான் தெரிகின்றது அத்தனையும் பொய் கணனி ஒரு முட்டாள் கருவி என்பது.

இவ்வாறு காலம் செல்கையில் எமது பாடசாலை நூலகத்திற்கு தமிழ் கம்பியூட்டர் சஞ்சிகை எடுக்கத் தொடங்கினார்கள். தவறாமல் முதலாவதாக அந்த சஞ்சிகையை எடுத்து வாசிப்பேன். பெரும்பாலான கட்டுரைகள் விளங்குவதே இல்லை. சும்மா படங்களையாவது பார்த்து விட்டே வைப்பேன். என் ஆர்வம் தணியவே இல்லை. கடைசியாக 1999 ல் கணனியைத் தொடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

1999 ல் எனது கல்விப் பொதுத்தாராதரப்பத்திர சராதாரண தரப் பரீட்சையை எடுக்க வேண்டி ஏற்பட்டது. பரீட்சை டிசம்பரில் முடிந்ததும் வழமைபோல உயர் தர வகுப்பிற்கான தனியார் வகுப்புகள் ஆரம்பித்துவிடும். ஆயினும் பாடசாலை தொடங்க குறைந்தது மூன்று மாதங்களாவது கழியும். இந்த மூன்று மாத காலத்தில் பெரும்பாலான மாணவர்கள் கணனி வகுப்பிற்குச் செல்வார்கள். நானும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கணனி கல்வி கற்றச் சென்றேன். நல்ல வேளையாக அப்போது பாடசாலை பழைய மாணவர் சங்கம் ஒரு கணனி ஆய்வு கூடத்தை பாடசாலைக்காகக் கட்டிக்கொடுத்து இருந்தது. ஆகவே குறைந்த செலவில் பாடசாலையில் கணனி வகுப்புகளை கற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

பாடசாலையில் முதன் முதலாக எம்மை அழைத்துச் சென்று கணனிக்கு அறிமுகம் என்று கணனியியலின் வரலாறு கணனியியலின் தந்தை என்று அறு அறு என்று அறுத்தார்கள் பின்பு ஒரு நாள் திடீர் என்று பாடசாலை கணனி ஆய்வு கூடத்திற்குள் அழைத்துச் சென்றார்கள். எனக்குக் கைகால் புரியாமல் இருந்தது. ஏதோ நாசா ஆய்வு கூடத்தினுள் நுழைந்து விட்டது போல மனதெல்லாம் பரபரப்பாக இருந்து. கணனி திரையில் சிவனும் பார்வதியும் இருப்பது போல இருக்கின்றது. அதாவது எங்கள் பாடசாலை இந்துப் பாரம்பரியத்தில் கண்ணாண பாடசாலை ஆகவே கணனி வோல் பேப்பரில் சிவன் பார்வதி படத்தைப் போட்டு இருந்தார்கள். அப்படியே மற்றக் கணனியைத் திரும்பிப் பார்க்கையில் சின்னது சின்னதாக பல ஜன்னல்கள் பறந்து கொண்டு இருக்கின்றன. விஷ் … விஷ… என அவை வரும் வேகத்தைப் பார்த்தால் கணனித் திரையினில் இருந்து வெளியே விழுந்துவிடும் போல இருந்தது (பின்னர்தான் தெரிந்து கொண்டேன் அதுதான் ஸ்கிரீன் சேவர் என்று).
இப்பிடியே மலைத்து மலைத்தே சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் கணனியில் எம்மை உட்கார வைத்தார்கள். பெயின்டில் படம் கீறிப் பழகுமாறும் கேட்டுக்கொண்டனர். இதன் மூலம் சுட்டி எமது கட்டுப் பாட்டுக்குள் வரும் என்பது அவர்களின் கணிப்பு. சில நாட்கள் இவ்வாறே படம் கீறுவதில் கழிந்தது. இரவில் தூக்கத்தில் கூட எம்.எஸ் பெயின்டில் படம் கீறுவேன். இப்போ நினைத்தால் சிரிப்பு வரும். பின்னர் மெல்ல மெல்ல ஆபீஸ் தொகுப்பு, வின்டோஸ் என்பனவும் கற்பிக்கப்பட்டன.

இவ்வாறு கணனி பற்றிய அடிப்படை அறிவு வந்ததும் கணனி சஞ்சிகைகள் குறிப்பாக தமிழ் கம்பியூட்டர் போன்றவற்றில் கணிசமாக பகுதி விளங்கத் தொடங்கியது. பாடசாலையில் சஞ்சிகையை நேரம் கழித்தே சஞ்சிகை வாங்குவார்கள் என்பதால் நானே வாங்கத் தொடங்கினேன். நானும் எனது நண்பன் பிரசாந்தும் (இப்போ ஒரு தொண்டர் நிறுவனத்தில் கணனி வலைப்பின்னல் மேலாளராகப் பணி புரிகின்றான்) எம்மிடையே கணனி நோக்கிய ஆர்வம் பொங்கி வழிவதை இனம் கண்டுகொண்டோம். இந்த கணனியே இருவரையும் நல்ல நண்பர்களாக மாற்றிவிட்டது.

இதே வேளை இணையம் பற்றிய ஆர்வமும் மெல்ல மெல்ல பற்றத் தொடங்கியது. இணையம் என்பது அப்போது மிக மிக பெறுமதியான பொருள். திருகோணமலையில் இணையம் பார்க்க நிமிடத்திற்கு ரூபா 4 முதல் ரூபா 7 வரை வசூலிப்பார்கள் (மணிக்கு கிட்டத்தட்ட 240 ரூபா). அப்போது ஒரு மின்னஞ்சல் முகவரி தொடங்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியது. ஹாட்மெயிலில் ஒரு மின்னஞ்சல் கணக்குத் தொங்கிக்கொண்டேன். இன்று வரை அந்த கணக்கைப் பாதுகாத்து வருகின்றேன். இப்போ அந்த மின்னஞ்சல் கணக்கிற்கு ஏழு வயது ஆகின்றது. இணையம் சம்பந்தமான தமிழ் புத்தகங்களை வாங்கி வாசித்துக் கொண்டேன். ஆங்கிலப் புத்தகங்களை வாசிக்க விரும்பினாலும் ஆங்கிலம் மட்டம். அதனால் தமிழ் புத்தகங்களில் தங்கியிருக்க வேண்டிய நிலையே ஏற்பட்டது. நான் வாசித்த புத்தகங்களில் பிரபலமானது என்று சொன்னால் அது Internet என்கிற சுந்தர்ராஜன் எழுதிய புத்தகம்.

இவ்வாறு பல முயற்சிகளில் நான் இறங்கினாலும் என்னிடம் என்று ஒரு கணனி இருக்கவில்லை. என்னுடைய நண்பன் ஒருவனுக்கு சுவிற்சர்லாந்தில் இருக்கும் அவன் மாமனார் ஒரு 486 கணனியை அனுப்பியிருந்தார். அந்தக் கணனியிலேயே நாம் பல டாஸ் கேம்களை விளையாடினோம். விளையாடிய விளையாட்டுகளில் எனக்குப் பெயர் ஞாபகம் இருப்பதென்றால் 3D Wolf. ஒரு கை வந்து கணனித் திரையில் தெரியும் முன்னால்வரும் எதிரிகளைச் சுட்டு விட்டு சிறைச்சாலையில் இருந்து நான் தப்ப வேண்டும் இதுதான் கதை. இந்த கணனி விளையாட்டை அரைமணி நேரம் விளையாடினால் பின்னர் ஒரு மணிநேரம் எனக்குத் தலை சுற்றும். அந்தளவு ஈடுபாட்டுடன் விளையாடுவேன். இதைவிட ஒரு ஹெலி விளையாட்டு மற்றது Dogs என்னுமொரு விளையாட்டு என்பனவே நான் அவன் கணனியில் விளையாடியது.

2000 ம் ஆண்டும் பிறந்தது எல்லாரும் Y2K என்றொரு பிரைச்சனை வர உள்ளதாகப் பேசிக்கொண்டனர். நானும் இது பற்றி பல இடங்களில் வாசித்து அறிந்து கொண்டேன் கடைசியாக எதுவும் நடக்கவில்லை. அதே வேளை வின்டோஸ் 2000 வெளியிடப்பட்டது. பில்கேட்சை தொலைக்காட்சியில் பார்த்து ஹாய்….!!!! என்று சத்தம் இட்டுச் சிரித்துக்கொண்டேன். அம்மா அப்பாவிற்கு வின்டோஸ் பற்றி நான் அறிந்தவற்றை எடுத்து விளாசினேன். இவ்வாறு என் கணனிப் பயனம் அழகாக அரங்கேறிக்கொண்டே இருந்தது. காலமும் மெல்ல மெல்லக் கரைந்து கொண்டு இருந்தது.

எது எப்படி இருந்தாலும் காலம் எம்மோடு விளையாடுவது நடந்தே தீரும் அல்லவா?. அவ்வாறு எனக்கும் காலத்துடன் நகர்ந்து உண்மையை நோக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதாவது கணனியிற்கும் எனக்குமான இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியது. அதிகரிக்கத் தொடங்கியது என்பதைவிட அதிகரிக்கப் பட வைக்கப்பட்டது என்றே சொல்லலாம்.

(தொடரும்…..)

Advertisements

2 responses to “68 : என்னருமைக் காதலி கணனி

  1. வடுவூர் குமார்

    தொடரும் என்று போட்டுவிட்டு தொடரவில்லையே??

  2. தொடரலாம் என்றுதான் உள்ளேன் வடுவூர் குமார்..!!!
    ஆனாலும் நேரம் கிடைக்குதில்லை!! 21 ம் திகதிக்குப் பின்னர் கட்டாயம் எழுதுகின்றேன்….
    வருகைக்கு மிக்க நன்றி!!!! 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s