தமிழில் நுட்பம்

Entries categorized as 'தமிழ்'

UN DATA - ஐநா தரவுகள்

மார்ச் 7, 2008 · No Comments

ஐ.நா லோகோஐ.நாவின் தரவுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சனத்தொகை, GDP,GNP,trade, commodities, agriculture, employment, the environment, industry, education, tourism மற்றும் பல தரவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

முதல் தடவை உள்செல்லும் போது பிரபலமான தேடல்கள் காட்டப்படும். அதனை சொடுக்கி முடிவுகளைக் காணலாம். அல்லது நாடு வாரியான தகவல்களையும் காணலாம். உதாரணத்திற்கு Spain பற்றித்தேட spain என்று உள்ளிடுங்கள். அதன் பின்னர் ஸ்பெயின் பற்றிய தகவல்களைக் காணலாம்.
இலங்கை UN data

Categories: துணுக்குகள் · பொது
குறிச்சொல்லிடப்பட்டது: , , ,

ஆர்கூட் தமிழில்

செப்டம்பர் 14, 2007 · 10 Comments

இன்று ரவியிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் ஆர்கூட்டுக்கு தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி இருந்தது…!!!

ஜிமெயிலுக்கே இன்னமும் தமிழ் இடைமுகம் வழங்கப்படாத நிலையில் எவ்வாறு ஆர்கூட்டுக்கு வழங்கினார்கள் என்று சென்று பார்த்தேன்… அட சத்தியமாத்தாங்க.. தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டுள்ளது!!!!

Settings -> Display Lanugauge: தமிழ் என்பதைத் தெரிவு செய்தால் சரி. தமிழ் இடைமுகம் கிடைத்துவிடும்.

மொழிபெயர்பில் சில குறைகள் உள்ளதை மறுக்க முடியாது. ஆயினும் கூகுளுக்கு இந்தளவில் மனம் வந்ததே பெரிய விடயம்.

இது பற்றிய மேலதிக உரையாடல்களை கூகளின் இந்திய மொழிகளுக்கான குழுமத்தில் உரையாடலாம்!!!

திரைக்காட்சியைக் காண்க

Categories: இணையம் · கணனி · செய்திகள் · தமிழ்

68 : என்னருமைக் காதலி கணனி

ஏப்ரல் 2, 2007 · 2 Comments

அண்மையில் ஆதவா ஒரு கட்டுரையில் தானும் கணனி விளையாட்டுகளும் எப்படி ஒன்றுடன் ஒன்று பின்னிப பிணைந்து இருந்தோம் என்று எழுதி இருந்தார். அதை வாசித்ததும் நானும் எனது கணனி அனுபவங்களை ஒரு கட்டுரையாக எழுத வேண்டும் என்ற எண்ணம் உருவானது. இந்த எண்ணத்திற்கு வித்திட்ட ஆதவனிற்கு நன்றிகள்.

நான் முதன் முதலாகக் கணனியைக் கண்டது 1993 ல் அதாவது அப்போது ஆண்டு ஐந்து படித்துக்கொண்டு இருந்தேன். நான் இடைவேளை நேரத்தில் அடிக்கடி செல்வது கணனி அறை யன்னலோரம். அப்போது எமது பாடசாலையில் ஒரு கணனி இருந்தது. அதை என்ன தேவைக்காகப் பயன் படுத்தினார்கள் என்பது இன்று வரை எனக்குத் தெரியாது. யன்னல் ஓரத்தில் நின்று கணனியை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருப்பேன். கணனி என்பது எமக்கெல்லாம் எட்டாக்கனி. பாடசாலையில் அதிகமாகப் பாதுகாக்கப்பட்ட அறைகளில் அதுவும் ஒன்று. இவ்வாறு அந்தக் கணனியைப் பார்த்துப் பார்த்து என் காலம் கழிந்தது. கணனி என்றால் ஏதோ மாயா ஜாலம் செய்யும் என்று பேசிக்கொண்டனர். நண்பர்கள் தம் பாட்டிற்கு ஏதேதோ சொல்லிக்கொண்டார்கள். இப்போதுதான் தெரிகின்றது அத்தனையும் பொய் கணனி ஒரு முட்டாள் கருவி என்பது.

இவ்வாறு காலம் செல்கையில் எமது பாடசாலை நூலகத்திற்கு தமிழ் கம்பியூட்டர் சஞ்சிகை எடுக்கத் தொடங்கினார்கள். தவறாமல் முதலாவதாக அந்த சஞ்சிகையை எடுத்து வாசிப்பேன். பெரும்பாலான கட்டுரைகள் விளங்குவதே இல்லை. சும்மா படங்களையாவது பார்த்து விட்டே வைப்பேன். என் ஆர்வம் தணியவே இல்லை. கடைசியாக 1999 ல் கணனியைத் தொடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

1999 ல் எனது கல்விப் பொதுத்தாராதரப்பத்திர சராதாரண தரப் பரீட்சையை எடுக்க வேண்டி ஏற்பட்டது. பரீட்சை டிசம்பரில் முடிந்ததும் வழமைபோல உயர் தர வகுப்பிற்கான தனியார் வகுப்புகள் ஆரம்பித்துவிடும். ஆயினும் பாடசாலை தொடங்க குறைந்தது மூன்று மாதங்களாவது கழியும். இந்த மூன்று மாத காலத்தில் பெரும்பாலான மாணவர்கள் கணனி வகுப்பிற்குச் செல்வார்கள். நானும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கணனி கல்வி கற்றச் சென்றேன். நல்ல வேளையாக அப்போது பாடசாலை பழைய மாணவர் சங்கம் ஒரு கணனி ஆய்வு கூடத்தை பாடசாலைக்காகக் கட்டிக்கொடுத்து இருந்தது. ஆகவே குறைந்த செலவில் பாடசாலையில் கணனி வகுப்புகளை கற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

பாடசாலையில் முதன் முதலாக எம்மை அழைத்துச் சென்று கணனிக்கு அறிமுகம் என்று கணனியியலின் வரலாறு கணனியியலின் தந்தை என்று அறு அறு என்று அறுத்தார்கள் பின்பு ஒரு நாள் திடீர் என்று பாடசாலை கணனி ஆய்வு கூடத்திற்குள் அழைத்துச் சென்றார்கள். எனக்குக் கைகால் புரியாமல் இருந்தது. ஏதோ நாசா ஆய்வு கூடத்தினுள் நுழைந்து விட்டது போல மனதெல்லாம் பரபரப்பாக இருந்து. கணனி திரையில் சிவனும் பார்வதியும் இருப்பது போல இருக்கின்றது. அதாவது எங்கள் பாடசாலை இந்துப் பாரம்பரியத்தில் கண்ணாண பாடசாலை ஆகவே கணனி வோல் பேப்பரில் சிவன் பார்வதி படத்தைப் போட்டு இருந்தார்கள். அப்படியே மற்றக் கணனியைத் திரும்பிப் பார்க்கையில் சின்னது சின்னதாக பல ஜன்னல்கள் பறந்து கொண்டு இருக்கின்றன. விஷ் … விஷ… என அவை வரும் வேகத்தைப் பார்த்தால் கணனித் திரையினில் இருந்து வெளியே விழுந்துவிடும் போல இருந்தது (பின்னர்தான் தெரிந்து கொண்டேன் அதுதான் ஸ்கிரீன் சேவர் என்று).
இப்பிடியே மலைத்து மலைத்தே சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் கணனியில் எம்மை உட்கார வைத்தார்கள். பெயின்டில் படம் கீறிப் பழகுமாறும் கேட்டுக்கொண்டனர். இதன் மூலம் சுட்டி எமது கட்டுப் பாட்டுக்குள் வரும் என்பது அவர்களின் கணிப்பு. சில நாட்கள் இவ்வாறே படம் கீறுவதில் கழிந்தது. இரவில் தூக்கத்தில் கூட எம்.எஸ் பெயின்டில் படம் கீறுவேன். இப்போ நினைத்தால் சிரிப்பு வரும். பின்னர் மெல்ல மெல்ல ஆபீஸ் தொகுப்பு, வின்டோஸ் என்பனவும் கற்பிக்கப்பட்டன.

இவ்வாறு கணனி பற்றிய அடிப்படை அறிவு வந்ததும் கணனி சஞ்சிகைகள் குறிப்பாக தமிழ் கம்பியூட்டர் போன்றவற்றில் கணிசமாக பகுதி விளங்கத் தொடங்கியது. பாடசாலையில் சஞ்சிகையை நேரம் கழித்தே சஞ்சிகை வாங்குவார்கள் என்பதால் நானே வாங்கத் தொடங்கினேன். நானும் எனது நண்பன் பிரசாந்தும் (இப்போ ஒரு தொண்டர் நிறுவனத்தில் கணனி வலைப்பின்னல் மேலாளராகப் பணி புரிகின்றான்) எம்மிடையே கணனி நோக்கிய ஆர்வம் பொங்கி வழிவதை இனம் கண்டுகொண்டோம். இந்த கணனியே இருவரையும் நல்ல நண்பர்களாக மாற்றிவிட்டது.

இதே வேளை இணையம் பற்றிய ஆர்வமும் மெல்ல மெல்ல பற்றத் தொடங்கியது. இணையம் என்பது அப்போது மிக மிக பெறுமதியான பொருள். திருகோணமலையில் இணையம் பார்க்க நிமிடத்திற்கு ரூபா 4 முதல் ரூபா 7 வரை வசூலிப்பார்கள் (மணிக்கு கிட்டத்தட்ட 240 ரூபா). அப்போது ஒரு மின்னஞ்சல் முகவரி தொடங்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியது. ஹாட்மெயிலில் ஒரு மின்னஞ்சல் கணக்குத் தொங்கிக்கொண்டேன். இன்று வரை அந்த கணக்கைப் பாதுகாத்து வருகின்றேன். இப்போ அந்த மின்னஞ்சல் கணக்கிற்கு ஏழு வயது ஆகின்றது. இணையம் சம்பந்தமான தமிழ் புத்தகங்களை வாங்கி வாசித்துக் கொண்டேன். ஆங்கிலப் புத்தகங்களை வாசிக்க விரும்பினாலும் ஆங்கிலம் மட்டம். அதனால் தமிழ் புத்தகங்களில் தங்கியிருக்க வேண்டிய நிலையே ஏற்பட்டது. நான் வாசித்த புத்தகங்களில் பிரபலமானது என்று சொன்னால் அது Internet என்கிற சுந்தர்ராஜன் எழுதிய புத்தகம்.

இவ்வாறு பல முயற்சிகளில் நான் இறங்கினாலும் என்னிடம் என்று ஒரு கணனி இருக்கவில்லை. என்னுடைய நண்பன் ஒருவனுக்கு சுவிற்சர்லாந்தில் இருக்கும் அவன் மாமனார் ஒரு 486 கணனியை அனுப்பியிருந்தார். அந்தக் கணனியிலேயே நாம் பல டாஸ் கேம்களை விளையாடினோம். விளையாடிய விளையாட்டுகளில் எனக்குப் பெயர் ஞாபகம் இருப்பதென்றால் 3D Wolf. ஒரு கை வந்து கணனித் திரையில் தெரியும் முன்னால்வரும் எதிரிகளைச் சுட்டு விட்டு சிறைச்சாலையில் இருந்து நான் தப்ப வேண்டும் இதுதான் கதை. இந்த கணனி விளையாட்டை அரைமணி நேரம் விளையாடினால் பின்னர் ஒரு மணிநேரம் எனக்குத் தலை சுற்றும். அந்தளவு ஈடுபாட்டுடன் விளையாடுவேன். இதைவிட ஒரு ஹெலி விளையாட்டு மற்றது Dogs என்னுமொரு விளையாட்டு என்பனவே நான் அவன் கணனியில் விளையாடியது.

2000 ம் ஆண்டும் பிறந்தது எல்லாரும் Y2K என்றொரு பிரைச்சனை வர உள்ளதாகப் பேசிக்கொண்டனர். நானும் இது பற்றி பல இடங்களில் வாசித்து அறிந்து கொண்டேன் கடைசியாக எதுவும் நடக்கவில்லை. அதே வேளை வின்டோஸ் 2000 வெளியிடப்பட்டது. பில்கேட்சை தொலைக்காட்சியில் பார்த்து ஹாய்….!!!! என்று சத்தம் இட்டுச் சிரித்துக்கொண்டேன். அம்மா அப்பாவிற்கு வின்டோஸ் பற்றி நான் அறிந்தவற்றை எடுத்து விளாசினேன். இவ்வாறு என் கணனிப் பயனம் அழகாக அரங்கேறிக்கொண்டே இருந்தது. காலமும் மெல்ல மெல்லக் கரைந்து கொண்டு இருந்தது.

எது எப்படி இருந்தாலும் காலம் எம்மோடு விளையாடுவது நடந்தே தீரும் அல்லவா?. அவ்வாறு எனக்கும் காலத்துடன் நகர்ந்து உண்மையை நோக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதாவது கணனியிற்கும் எனக்குமான இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியது. அதிகரிக்கத் தொடங்கியது என்பதைவிட அதிகரிக்கப் பட வைக்கப்பட்டது என்றே சொல்லலாம்.

(தொடரும்…..)

Categories: அனுபவம் · தமிழ் · பொது

47 : கணனிக் கன்னி

நவம்பர் 14, 2006 · 4 Comments

காலை 10 மணியளவில் குளியலறைக்குச் சென்று ஒரு குளியல் போட்டேன். மனது குதூகலமாகவே இல்லை. கண்கள் எரிந்து கொண்டே இருந்தன. வெளியே சூரிய தேவரும் தன் பாட்டுக்கு வெப்பத்தை இலவசமாக அள்ளி வாரிக்கொண்டு இருந்தார். நேற்று வரை வாட்டிய சிக்கண் குணியாவில் வடுக்கள் இன்னும் ஆறவில்லை. தலையும் தன் பாட்டுக்கு அப்பப்போ சுர் என்றது.

இன்னும் இரண்டு மணி நேரத்தில் புறப்பட்டால்தான் அங்குபோய்ச் சேரலாம் என்று யோசித்துக்கொண்டேன். குளித்து முடித்து வெளியில் வந்ததும் அம்மா வந்து முன்னால் நின்றார்.
“தம்பி! அப்ப நாங்கள் என்னமாதிரி வாறது?”

“அ…. நான் இப்ப போகோணும் பெற்றோர்மார் பிறகு வரலாம். முன்று மணிக்குத்தானே நிகழ்ச்சிகள் தொடங்கும்…” நான் சொன்னேன்.

“அப்ப சரி! நீ முன்னுக்குப் போ நாங்கள் பின்னால வாறம்”

அவசரம் அவசரமாக நீளக் காட்சட்டையை மாட்டிக்கொண்டேன். பின்பு டை, சப்பாத்து ஜெல் என அனைத்தையும் மறக்காமல் அணிந்துகொண்டேன். கண்ணாடி முன்னால் நின்று ஒரு தடவை பார்த்துக்கொண்டேன். “ம்… என்னதான் சொன்னாலும் என்ட பழைய பர்சனாலிட்டியை இந்தக் கோதாரி விழுந்த சிக்கன் குனியா அழிச்சுப் போட்டுது” மனதுக்குள் பொறுமிக்கொண்டேன். (டேய் அடங்குடா ஓவரா அறுக்காத என்று நீங்கள் சொல்வதும் கேட்கிறது)

அடுத்து கீழே வந்து கடிகாரத்தைப் பார்த்தபோது நேரம் 11:30 சாட்டுக்கு சோற்றை வாய்க்குள் தள்ளிவிட்டு கைகளை அலம்பிக்கொண்டு புறப்பட்டேன்.

பிருத்தானியக் கணனிச் சங்கம் வருடா வருடம் பட்டமளிப்பு விழாவை நடத்தும். பல்கலைக்கழகத்திற்கு மேலதிகமாக இந்த சங்கத்தின் பாடநெறியை நானும் படிக்கின்றேன். இறுதியில் நான் ஒரு லண்டன் பட்டதாரியாகும் வாய்ப்புக் கிடைக்கும். நான் இப்போது முதலாவது கட்டத்தில் சித்தியெய்தியுள்ளேன். பட்டம் பெற இன்னும் இரண்டு மட்டங்கள் தாண்ட வேண்டும். மாணவர்களைப் பாராட்டவும் மேலும் தொடர்ந்து படிக்க ஊக்குவிக்கவும் பட்டம் பெறுவோருடன் எமக்கும் சான்றிதள்கள் வழங்கவுள்னர். அதற்காகத்தான் நான் இந்தப் பறப்பு பறந்துகொண்டு இருந்தேன்.

வீதியால் நடக்கத் தொடங்கினேன். கடும் வெயில் ஆயினும் கவனம் முழுவதும் விரைவில் சென்று பஸ்தரிப்பு நிலையத்தை அடைந்து விட வேண்டும் என்பதுதான்.

நடந்துகொண்டு இருந்தபோதுதான் தெரிந்தது. அழைப்பிதழை எடுக்கும் அவசரத்தில் அடையாள அட்டையை விட்டுவிட்டு வந்துவிட்டேன். வீடு திரும்பிச் சென்று எடுத்து வருவது என்றால் இன்னுமொரு அரைமணிநேரம் அழிந்துவிடும். எடுக்காமல் சென்றால் எங்கயாவது நடுவழியில் படையினரின் சோதனை நடவடிக்கையில் மாட்டி சிறைச்சாலையில் இருக்கவேண்டியதுதான்.

எதற்கும் துணிந்துவிட்டேன்.. நடப்பது நடக்கட்டும். பஸ் தரிப்பிடத்தை நோக்கி நடக்கத்தொடங்கினேன்.

176 ம் இலக்க பஸ்சில் ஏறினேன் அது மரதானை வழியாகப் பொறளை சென்றது. பொறளையில் இறங்கி 154 எடுத்து பண்டாரநாயகா ஞாபகார்த்த மண்டபத்தை அடைந்தேன். நீளக்கைச் சட்டை டை என்பன ஏற்கனவே இருந்த வெப்பத்தை மேலும் ஒரு படி கூட்டியது. வியர்வை ஆறாக ஓடத்தொடங்கியது.

இந்த மண்டபம் இலங்கையில் ஒரு பிரபலமான மண்டபமாகும். மறைந்த முன்னாள் பிரதமரும் சிங்களச்சட்டத்தின் தந்தையுமானவரின் ஞாபகார்த்தமாக சீனா அரசு அமைத்துக்கொடுத்தது. பிரமாண்டமான கட்டிடத்துள் பல்வேறு மாநாட்டு மண்டபங்கள் இருக்கின்றன.

அன்று பார்த்து மண்டப வாயிலில் சோதனை கெடுபிடிகள் அதிகமாகவே இருந்தன. என்னிடம் அடையாள அட்டையும் இல்லாததால் பயத்துடனே மண்டபத்தின் நுழைவாயிலினுள் நுழைய முற்பட்டேன்.

“மல்லி!!! IC கோ (தம்பி அ.அ எங்கே)??” முறைப்பாகக் கேட்டான் இராணுவச் சிப்பாய். அவன் கண்களில் கோபம் மிளிர்கிறது.

ஏதோ ஒரு அசட்டுத்துணிவில் புறப்பட்டேன். இப்போது எனக்கு செய்வது தெரியவில்லை… கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை… விழிபிதுங்கத் தொடங்கினேன்.

(தொடரும்…)

Categories: அனுபவம்